Wednesday, 25 May 2011

அ.கெளரிதாசன்


அழுகின்றேன்

காசை இறைத்துக் காலம் முழுதும்
காமன் உலகில் பயணித்தேன்
ஆசை நாயகி ஒன்றா, இரண்டா?
ஆனந் தத்தின் பெறுபேறு!
*
ஊசி மருந்து வில்லைக ளோடும்
உலக வாழ்க்கை தொடர்கிறது
தூசி படிந்த வாழ்க்கையை நினைக்க
துயரம் தொண்டையை அடைக்கிறது
*
கோயில் சிலைபோல் மனைவி யிருக்க
கோட்டா னோடு வாழ்ந்திட்டேன்!
பாயில் விழுந்து துயரம் பற்றப்
பாவச் செயலை நினைக்கின்றேன்!
*
தாலி கட்டிய தையலாள் தடுத்தும்
தாசிகள் இல்லம் சென்றிட்டேன்!
வாலி பத்தினைத் தொலைத்தது மிச்சம்
வாழ்வில் எதனைக் கண்டிட்டேன்!
*
அன்னை தந்தையர் அறிவுரை யெல்லாம்
அப்பால் தள்ளி வைத்திட்டேன்!
இன்பம் மதுவில் மூழ்குதல் என்றே
இரவு பகலாய் குடித்திட்டேன்!
*
எழிலாம் தோட்டம், செந்நெற் கழனிகள்
எல்லாம் விற்று முடித்திட்டேன்!
வழிவே றின்றி வைத்திய சாலையின்
வார்ட்டில் படுத்து அழுகின்றேன்!

No comments:

Post a Comment