Wednesday, 25 May 2011


நலம் சேர்க்கும் நத்தார்!

சத்தமிடும் போருக்கு சாவு மணியாக
சாகின்ற பயிர்களுக்கு வானமழையாக
யுத்தத்தை நிறுத்திவிடும் புரிந்துணர்வு போல
யுவதிகளை வாழ்விக்கும் மாங்கல்யம் போல
திக்கற்ற ஏழைக்குத் தெய்வம்துணை போல
திரைகடலில் தெப்பத்தின் பாய்மரத்தைப் போல
பக்கத்தே அணைத்தெடுத்து பாலூட்டும் தாயாய்
பரிவோடு நலம்சேர்க்க நத்தார்தான் வருக!
 
போடிமார் இல்லினிலே பூனைக்கும் தயிர்போல்
புதுவசந்த காலத்தே பூத்திருக்கும் மலர்போல்
வாடிநிதம் பிணிகூடி வருந்துபவர் அருந்தும்
வளம் சேர்க்கும் மருந்தாக விருந்தாக என்றும்
ஆடிக்குச் சோடிகட்டும் ஆவணியைப் போலும்
ஆரணங்கின் தேகத்தில் தாவணியைப் போலும்,
நாடியுனை வரங்கேட்டுக் கைகூப்புவோர்கள்
நாளெல்லாம் களிப்புறவே நத்தார்தான் வருக!
 
கப்பலுக்கு வழிகாட்டும் கலங்கரையின்
ஒளிபோல்
கழனிக்கு வளங்கூட்டும் கதிரவனின் கதிர்போல்
செப்பரிய தமிழ்க்கவிக்கு சீர்தளைகள் அணிபோல்
சிங்களவர் தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவர்கள் நலம் போல்
பங்கமிலா உறவுக்கும் நட்புக்கும் என்றும்
பாலமிடும் சோதரராய் பாரினிலே அன்பு
மங்காமல் நீதிநெறி சமத்துவங்கள் வாழும்
மலர்க்காடாய் புவிமாற நத்தார்நாள் வருக!
 
கல்விபயில் மாணவர்தம் கரமேந்தும் நூலாய்
கவிபுனையும் பாவலரின் கையிலுள்ள கோலாய்
தொல்லுலகில் மேழியினால் கழனிதனில் செல்வம்
தோற்றுவிக்கும் உழவனது இணையற்ற தொண்டாய்,
நல்லவர்கள் நீதியுடன் நேர்மைவழி பற்றி
நடுநிலைமை வழங்குகின்ற தார்மீகப் பணியாய்
வல்லமைகள் தந்தெமது வாழ்வில் ஒளி பிறங்க
வாழ்த்தியுனை அஞ்சலித்தோம், நத்தார்நாள் வருக”
 
கவிஞர் அ. கெளரிதாசன்
ஆலங்கேணி கிழக்

No comments:

Post a Comment